April 4, 2025

Curious Cub

2017 ஜூலை மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்று நினைக்கிறேன். ஆகஸ்ட் மாதம் முதல் வில்பத்து தேசிய வனம் வரட்சி காரணமாக பார்வையாளர்களுக்கு மூடப்படும் என்ற அறிவித்தல் வந்ததால் ஒரு சபாரி போய்விடலாம் என்று வெளிக்கிட்டிருந்தோம்.

குரு றிஸ்னாட் மற்றும் நண்பர் அசித் இணைந்திருந்தனர். முழு நாளும் சுற்றினோம்.

முதன்முறையாக கரடியை தெளிவாக படம்பிடித்தது அன்றுதான்.

வரட்சி காரணமாக குறைந்த நீர்வளத்தில் அதிக எண்ணிக்கை பறவைகள் இரைக்கு சண்டையிட்ட காட்சிகள் சிக்கின.

குள்ளநரிச் சோடி முத்தமிடுவது போன்ற எதிர்பாராத படமும் எடுக்கக் கிடைத்தது.

ஆனால், சிறுத்தை கண்ணிலேயே படவில்லை. வில்பத்துவில் சிறுத்தையை காண்பது எனக்கு அரிதான சந்தர்ப்பமாகவே இருந்தது.

நேரம் பிற்பகல் 5:00 மணியை தாண்டவும் சாரதி வெளியே போவோம் சேர் என்றார். 6:00 மணிக்கு வெளியாக வேண்டும்.

சரி போவோம் என்று கவலையுடன் வெளியேறும் போது, ஓரிடத்தில் இரண்டு ஜீப்கள் நின்றன. சிறுத்தை நிற்கிறது என்று சைகை செய்தனர். மரங்களினூடே தூரத்தில் ஒரு இளஞ்சிறுத்தை கண்ணில் பட்டது.

வாகனத்தை திருப்பிக்கொண்டு வருவோம் என்றார் சாரதி. நாங்கள் திரும்பி வரவும், சிறுத்த வீதயோரத்துக்கு அண்மையில் இருந்த மரக்கட்டையில் ஏறி அமரவும் சரியாக இருந்தது.

வாகன சத்தங்களால் பயந்ததிருக்குமோ தெரியாது. அங்குமிங்கும் பார்த்தபடி சிறிது நேரம் அங்கேயே குந்தியிருந்தது.

சிறுத்தையை மிக அருகில் பார்த்த சந்தர்ப்பம் இதுதான்.

Nikon D7200 / Nikkor 200-500 mm lens

ISO 1600 | 280 mm | f/7.1 | 1/50 sec

RECENT POSTS

    Leave a comment